Saturday, 18 July 2020

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் 2

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் :

கிருஷ்ணதேவராயரின் மகன் இறந்ததும், ராமராயரின் வலு குன்றியது. அக்குழந்தை இறந்ததும் அச்சுதராயரின் போக்கும் மாறியது. ஆகவே ராமராயர் தன்பக்கம் வலுசேர்க்க தன்படையிலிருந்த பழைய வீரர்களை நீக்கிவிட்டு தன் உறவினர்களையும், நண்பர்களையும் தளபதிகளாய் நியமித்தார். இதற்கிடையில் 1535ல் பதவியேற்ற பீஜப்பூரின் புதிய சுல்தானான இப்ராஹீம் அடில்கான் பதவியிலிருந்து நீக்கிய 3000 இஸ்லாம் படைவீரர்களை தன்படையில் சேர்த்தார் ராமராயர். கிருஷ்ணதேவராயர் பீஜப்பூரை முன்னர் அழித்ததை மனதில் வைத்த பீஜப்பூர் சுல்தான் இப்ராஹிம் விஜயநகரின் அப்போதைய குழப்பமான சூழலை பயண்படுத்தி விஜயநகரத்தை முற்றுகையிட்டார். நாகலாபுரத்தை தரைமட்டமாக்கினார். இருவரில் எவரேனும் ஒருவரோடு சுல்தான் இணைந்தால் ஆபத்து என்பதையுணர்ந்த இருவரும் சமாதானம்பேச இப்ராஹீமை அழைத்தனர். அச்சுதனே அரசனாகவும், அவனுக்கு கீழடங்கிய ஏதோ ஓர் பகுதியில் சுதந்திரஅரசனாய் ராமராயர் தொடரலாம் என ஒருவாறு முடிவுக்கு வந்தனர். இவ்வொப்பந்தம் அச்சுதன் இறக்கும் வரையிலும் தொடர்ந்நது. 

அச்சுதன் இறக்கவும் அவன் மகன் வேங்கடன் அரசனானான், அவன் வயதில் இளைஞனாய் இருந்ததால், அவன் தாய்மாமன் திருமலை அவனுக்கு பதிலாக ஆட்சிநடத்தினான். மக்களின் அதிருப்தியை இருவரும் சம்பாதித்தனர். இந்நிலையில் மறுபுறம் சுல்தான்கள் தங்கள் செல்வாக்கை பெருக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் வேங்கடனின் தாய் தன் தமையனின் அராஜத்தை போக்க அடில்கானிடம் உதவிகோரினார். அடில்கானும் படையை திரட்டி விஜயநகரம் வர, திருமலை பெரும்பணம் கொடுத்து வரும்வழியே திரும்பிபோக கெஞ்சிகேட்க, ராமராயனோ சதாசிவத்தினை மன்னனாக்க அதே அடில்கானிடம் வேண்டினான். அதனையேற்ற அடில்கான் விஜயநகரை நோக்கி படையெடுத்தான். இதில் திருமலை வெற்றிபெற, தனக்குபின் அரசனாக இனி எவரும் முயற்சிபெற கூடாதென தன் சகோதரி, சகோதரிமகன் வேங்கடன் என அனைவரையும் கருவறுத்தான். ராமராயன் தன் ஆதராளவர்களுடன் படையெடுத்து பல போர்களுக்குபின் முடிவில் திருமலையை துங்கபத்திரை கரையில் வெட்டி வீழ்த்தினான். இவ்வளவு ரத்தகளறியுடன் வெறியாட்டம் ஆடி 1543ல் சதாசிவத்திற்கு முடிசூட்டினான் ராமராயன்.

பெயரளவில் சதாசிவம் ஆண்டாலும் ராமராயனே அனைத்து அதிகாரத்தையும் கையிலெடுத்தான். இரண்டாம் தேவராயர் காலத்திலே முஸ்லீம் வீரர்களை படையில் சேர்க்கும் பழக்கம் இருந்தது, ஆனால் அவர் முடிவெடுக்கும் முக்கிய பதவிகளை தருவதை தவிர்த்தார், இந்த கோட்பாட்டை ராமராயன் கடைபிடிக்கவில்லை, அதிகஅளவில் படைகளில் சேர்த்தான். பல உயரிய பதவிகளை அளித்தான். இதனால் அலுவலக முக்கியவிஷயங்களை அவர்களும் தெரிந்து கொண்டனர்.

இவர்களில் முக்கியமான தளபதிகள்
 "கிலானி சகோதரர்கள்". இவர்கள் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்தனர்.

மேலும் தக்காண முஸ்லீம்கள், ராஜ்ய விவகாரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ராமராயன் தலையிட்டு, அவர்களுக்குள் ஒற்றுமையேற்படாத வண்ணம் பார்த்துக்கொண்டான். இந்த ஐந்து சுல்தான்களுக்குள்ளும் போர்வரும்போது அந்த விவகாரத்தில் விஜயநகர அரசன் கலந்து கொண்டு சமாதனம் செய்ய வேண்டும், என உடன்படிக்கை மேற்கொண்டனர்.
 இவர்கள் ஒன்றுசேர்ந்தால் பாதிப்பு தனக்குதான் என ராமராயன் எண்ணினான். தங்களுக்குள் ஒற்றுமையின்மை இருப்பதாலயே ராமராயன் தங்களை பயன்படுத்திவருவதை உணர்ந்து கொண்டனர் ஐந்து சுல்தான்களும். 

சுல்தான்கள் குறித்து சிறிய பிளாஸ்பேக்:

டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது.

இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அவைகள் அகமதுநகர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், பிஜப்பூர் சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகம் ஆகும். இந்த ஐந்து சுல்தானகங்கள் பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன.

அடுத்த பகுதிகளில் சுல்தான்களின் எழுச்சியை காண்போம்..
பீஜப்பூர் சுல்தான்களின் கண்காணிப்பு கோபுரம்




No comments:

Post a Comment

வீழ்ந்தது விஜயநகரம் 3

வீழ்ந்தது விஜயநகரம் : ராமராயன் தன் வாழ்க்கையை சாதாரண அலுவலனாக கோல்கொண்டாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவன். ஆதலால் கோல்கொண்டாவின் அரசியல் விவகா...